கேரளா: கேரள மாநிலம் கண்ணூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் தற்போது தரவுகளே இல்லாத அரசாங்கம் நடந்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.
இந்தியாவில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்பில், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரைத் தவிர, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பற்றிய தரவுகள் இல்லை என்றும் தெரிவித்தார்.
சாதிவாரியான கணக்கெடுப்பு அவசியம் என்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) பிரிவில் உள்ள பல்வேறு சாதியினர் குறித்த துல்லியமான கணக்கீடு அவசியம் என்றும் தெரிவித்தார்.
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமும், வறுமையும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய பாஜக அரசு அதைப் பற்றி கவலை கொல்லாமல், ஹிஜாப் மற்றும் இறைச்சி விவகாரத்தை பரபரப்பாக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கேரள அரசின் சில்வர் லைன் திட்டத்திற்கு தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
அதேநேரம், மகாராஷ்ட்ராவின் புல்லட் ரயில் திட்டத்திற்கு எதிராக தாங்கள் போராடியதற்கு காரணம், அத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதிலும், இழப்பீடு வழங்குவதிலும் பிரச்சினை இருந்ததாகவும் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் 161 அடி பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை திறப்பு!