லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023 இன்று (பிப். 10) தொடங்கியது. மூன்று நாட்கள் நடக்க உள்ள இந்த உச்சிமாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மோடி உரையாற்றுகையில், உலக வளர்ச்சியில் இந்தியா ஒரு பிரகாசமான இடமாக மாறியதை போல் உத்தப் பிரதேசம் நாட்டின் பிரகாசமான இடமாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் உத்தரப் பிரதேசம் ஊழல்களுக்கு பெயர்பெற்றது.
இதன் காரணமாக மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படாது, சட்ட ஒழுங்கை மேம்படுத்த முடியாது என்று மக்கள் நம்பி வந்தனர். ஆனால், பாஜக ஆட்சியின் 5 ஆண்டுகளாக தொடக்க ஆட்சியிலேயே அனைத்தும் மாறியது. உத்தரப் பிரதேசம் நல்லாட்சி, சட்டம் ஒழுங்கு, அமைதிக்கு பெயர் பெற்றது. நமது சமுதாயம் மற்றும் இளைஞர்களின் சிந்தனையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகின் ஒவ்வொரு நம்பகமான குரலும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை நம்பிக்கையுடன் பார்க்கிறது.
இதற்கு மிகப்பெரிய காரணம் நமது நாட்டு மக்களின் தன்னம்பிக்கையே. நாட்டின் சமூக, டிஜிட்டல், உள்கட்டமைப்பு வளர்ச்சி காரணமாக உத்தரப் பிரதேசம் பெரும் பலனை கண்டுள்ளது. டஜன் கணக்கான பழமையான சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த சீர்திருத்தங்களை நிர்பந்தத்தினால் அல்லாமல் நம்பிக்கையினால் நாடு செயல்படுத்தி வருகிறது. இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் எரிசக்தி துறைக்காக ரூ. 35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.