டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இந்த கூட்டத்தில் இன்று (டிசம்பர் 12) மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) கூற்றுப்படி, இந்தியா மூன்றாவது மிகப்பெரிய உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையாக உள்ளது. வரும் 2030ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய விமான போக்குவரத்து சந்தையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், விமான நிலையங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் விமான நிலையங்கள் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், விமான போக்குவரத்துத்துறை வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.98,000 கோடி முதலீட்டு செலவில் தற்போதைய விமான நிலையங்களை மேம்படுத்தவும், புதிய விமான நிலையங்களை அமைக்கவும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் தனியார் விமான நிலைய குழுக்கள் முடிவு செய்துள்ளன.