புத்த ஸ்தலங்களை இணைக்கும் முக்கிய ஊரான கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள குஷிநகரில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்.20) திறந்து வைத்தார்.
தொடக்க விழாவில் உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
புத்தருக்கு அர்ப்பணிப்பு
புத்தர் பிறப்பு - இறப்பு எனும் சுழற்சியில் இருந்து விடுபட்டு மகாபரிநிர்வாணா அடைந்த இடமான குஷிநகர், லும்பினி, சாரநாத், கயா ஆகிய புத்த தலங்களின் மையப் புள்ளியாக விளங்குகிறது.
இந்நிலையில், விமான நிலையத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, குஷி நகர் விமான நிலையத்தை புத்தருக்கு அர்ப்பணிப்பதாகவும், புத்த மத நம்பிக்கையின் மையப்புள்ளியான இந்தியாவில், புத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை இந்த விமான நிலையம் அதிகரிக்க உதவும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து வந்த முதல் விமானம்
இலங்கையிலிருந்து 100 புத்த பிக்குகள், முக்கியஸ்தர்களை, புத்த மத நினைவுச்சின்னங்களைத் தாங்கிய விமானம், கொழும்பு விமான நிலையத்திலிருந்து முதல் விமானமாக வந்தடைந்தது.
புத்த மதத்தில் உள்ள அஸ்கிரிய, அமராபுரா, ராமான்யா, மல்வத்தா எனும் நான்கு கட்டளைகளின் துணைத் தலைவர்கள், நமல் ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசின் ஐந்து அமைச்சர்களும் இந்த விமானத்தில் குஷி நகர் வந்தடைந்தனர்.