டெல்லி:நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று(ஜூலை 25) மக்களவையில் வெளிநாட்டுக் கடன் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
அப்போது பேசிய நிதியமைச்சர், "ரிசர்வ் வங்கியின் தரவுகள்படி, நாட்டின் வெளிநாட்டுக் கடன் 624.65 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. உலக வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட கடன் 74.84 பில்லியன் டாலர். இதில், 63.45 பில்லியன் டாலர் அரசாங்கத்தால் வாங்கப்பட்டது, 11.39 பில்லியன் டாலர் அரசு அல்லாத நிறுவனங்கள் வாங்கியுள்ளன. சர்வதேச நாணய நிதியத்திடம் வாங்கப்பட்டுள்ள கடன் 22.26 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த கடன்கள் நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடன் நிலுவையில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. இவை தவிர, ஏற்றுமதி கடன்கள், வணிகக் கடன்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் வைப்புத்தொகைகள், குறுகிய கால கடன்கள் போன்றவை இதில் அடங்கும். நாணயம் மற்றும் வைப்புத்தொகைகள், கடன் பத்திரங்கள், வர்த்தக கடன்கள் மற்றும் முன்பணங்கள், நேரடி முதலீடு உள்ளிட்டவையும் இந்த கடன் நிலுவையில் அடங்கும்.
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 4 ஆண்டுகளில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, இந்தியாவின் வெளிநாட்டுக்கடன் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் இறுதி வரையில், 573.4 பில்லியன் டாலராக இருந்தது. இது, 2022 மார்ச் மாத இறுதியில் 619.1 டாலராக அதிகரித்தது.
அதேபோல், கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிநாட்டு கடன்களுக்கான வட்டியாக 68.8 பில்லியன் அமெரிக்க டாலர் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில், வெளிநாட்டு கடன்களுக்கு செலுத்தப்பட்ட வட்டி 18.63 பில்லியன் டாலர். இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் சற்று குறைந்தது. 2021ஆம் ஆண்டு 15.41 பில்லியன் மற்றும் 2022-ல் 15.13 பில்லியன் டாலர் வட்டியாக செலுத்தப்பட்டது. இருப்பினும், கடந்த 2022-23ஆம் நிதியாண்டில் வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டி 19.66 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது" என்று கூறினார்.
முன்னதாக, இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் வெளியிட்டார். அதன்படி, அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: மதியம் 12 மணி வரை மக்களவை ஒத்தி வைப்பு!