மைசூரு: கர்நாடகா மாநிலம் மைசூருவில் நடைபெற்ற புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50ஆம் ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். விழாவில் கலந்து கொண்ட, நாட்டின் பல்வேறு புலிகள் காப்பகத்தின் இயக்குநர்களுடன் அவர் கலந்துரையாடினார். பின்னர் புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி பிரத்யேக நாணயத்தை வெளியிட்டார். அத்துடன் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் வகையில், சர்வதேச புலிகள் கூட்டமைப்பு (IBCA) என்ற திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
பின்னர் விழாவில் உரையாற்றிய பிரதமர், "சர்வதேச அளவில் வனவிலங்கு பாதுகாப்பில் இந்தியா பல்வேறு மைல்கற்களை எட்டியுள்ளது. உலக நிலப்பரப்பில் வெறும் 2.4 சதவீதம் பங்களிப்பை கொண்ட இந்தியா, பல்லுயிர் பெருக்கத்துக்காக 8 சதவீதம் பங்களிப்பை தருகிறது. உலகளவில் இந்தியா அதிக புலிகளை கொண்ட நாடாக விளங்குகிறது. 2018ம் ஆண்டு நாட்டில் 2 ஆயிரத்து 967 புலிகள் இருந்த நிலையில், 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி புலிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 167 ஆக உயர்ந்துள்ளது.
ஆசிய யானைகள் அதிகம் உள்ள நாடாக இந்தியா விளங்குகிறது. நம் நாட்டில் 30ஆயிரம் யானைகள் உள்ளன. அதுமட்டுமின்றி 3,000 காண்டாமிருகங்களும் உள்ளன. 2015ஆம் ஆண்டு 525 ஆசிய சிங்கங்கள் இருந்த நிலையில், 2020ஆம் ஆண்டு இதன் எண்ணிக்கை 675 ஆக அதிகரித்துள்ளது. சிறுத்தைகளின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 60 சதவீதம் உயர்ந்துள்ளது. பல்லுயிர் பெருக்கத்துக்காக கங்கை நதியை சுத்தம் செய்ததன் மூலம், அரியவகை நீர்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வன உயிரின பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு தான் இதற்கு காரணம்.