தமிழ்நாடு

tamil nadu

நாட்டின் முதல் வாக்காளரான ஷியாம் ஹிமாச்சல் எலெக்‌ஷனில் நேரில் சென்று வாக்களிக்க முடிவு!

By

Published : Oct 31, 2022, 8:17 PM IST

இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகி, தள்ளாத வயதிலும் ஹிமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தேர்தலில் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க முடிவு செய்துள்ளார். வீட்டிலேயே வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டபோதும், அதனை நிராகரித்தார்.

india
india

கின்னார்: நாட்டின் முதல் வாக்காளர் என்ற பெருமைக்குரியவர், ஷியாம் சரண் நேகி(106). ஹிமாச்சலப் பிரதேசத்தைச்சேர்ந்த இவர், 1951ஆம் ஆண்டு நடந்த நாட்டின் முதல் பொதுத்தேர்தலில் முதல் நபராக வாக்களித்தவர்.

அத்தேர்தலில் கின்னார் பகுதியில் பலரும் வாக்களிக்க முன்வராத நிலையில், முதல் ஆளாக ஆர்வத்துடன் வாக்களித்தார். அப்போது ஆசிரியராக இருந்த அவர், தான் வாக்களித்த பிறகு, பழங்குடியினர் வசித்த பகுதி முழுவதும் சென்று மக்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி வாக்களிக்கச்செய்தார். அவரது முயற்சிக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்தன.

ஷியாம் சரண் நேகிக்கு தற்போது 106 வயது ஆன போதிலும், இப்போதும் தேர்தலில் வாக்களிக்க மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார். நவம்பர் 12ஆம் தேதி ஹிமாச்சலப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத்தேர்தல் நடைபெறவுள்ளதால், அதற்கானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 80 வயதுக்கும் மேற்பட்டோர் விரும்பினால் தங்களது வீட்டிலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வீட்டிலேயே வாக்கைப்பதிவு செய்வதற்கான 12டி படிவத்தை அலுவலர்கள் ஷியாம் சரண் நேகிக்கு கொண்டு வந்து கொடுத்தனர். ஆனால், அவர் அந்தப் படிவத்தை திருப்பி அலுவலர்களிடம் கொடுத்துவிட்டார். தற்போதும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க உற்சாகத்துடன் இருப்பதாகவும், தான் ஜனநாயகத் திருவிழாவை கொண்டாடுவதை தனது முதுமை தடுத்துவிட முடியாது என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி அபித் உசேன் சாதிக் கூறுகையில், "நாட்டின் முதல் வாக்காளரான மாஸ்டர் ஷியாம் சரண் நேகி, 12டி படிவத்தை திருப்பி அளித்துவிட்டார். அவரே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க உள்ளதாகத் தெரிவித்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவர் வாக்களித்துவிட்டு வரும்போது வாக்குச்சாவடியில் சிவப்பு கம்பளம் போடப்படும். நேகியை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர சிறப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என்று கூறினார்.

இதையும் படிங்க:5 தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட மோபிர் பாலம் - தரச் சான்றிதழ் பெறப்பட்டதா?

ABOUT THE AUTHOR

...view details