ஸ்ரீஹரிகோட்டா : விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நாளை (அக். 21) ஈடுபட உள்ளது. இந்த சோதனை முயற்சியை நேரலையாக வெளியிட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் டிவி-டி1 (TV-D1) ராக்கெட் மூலம் நாளை (அக். 21) விண்ணில் செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா நாடுகளை தொடர்ந்து விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நீண்ட நாட்களாக தீவிரம் காட்டி வருகிறது.
அதற்காக ககன்யான் திட்டத்தை உருவாக்கி நீண்ட காலமாக இஸ்ரோ ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ககன்யான் திட்டத்திற்கு முன்னதாக மூன்று கட்ட சோதனைகளை செய்து பார்க்க இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. அதன் முதற்கட்டமாக நாளை (அக். 21) ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ் தரையில் இருந்து ஏறத்தாழ 400 கிலோ மீட்டர் தூரம் சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பி மீண்டும் அவர்களை பூமிக்கு அழைத்துவர இஸ்ரோ திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ககன்யான் திட்டத்தை 2025ஆம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்குமுன்னதாகவே இந்த 3 கட்ட பரிசோதனைகளையும் செய்து முடிக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.