கொழும்பு :ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானின் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், அதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தா, வங்காளதேசம் ஆகிய அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
சூப்பர் 4 சுற்றில் நேற்று(செப். 12) நடந்த 4வது ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் இன்னிங்சை ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் தொடங்கினர். அவசரகதியான ஷாட்டுகளை அடித்து சுப்மான் கில் (13 ரன்) மற்றும் விராட் கோலி (3 ரன்) அடுத்தடுத்து வெளியேறினாலும், பொறுப்பை உணர்ந்து கேப்டன் ரோகித் சர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவருக்கு இஷான் கிஷன் (33 ரன்), கே.எல். ராகுல் (39 ரன்) ஒத்துழைப்பு வழங்கினர். இதனிடையே ரோகித சர்மா (53 ரன் ) அரை சதம் விளாசி ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். 248 ஆட்டங்களில் விளையாடி உள்ள ரோகித் சர்மா 10 ஆயிரம் ரன்களை கடந்த 5வது இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
49 புள்ளி 1 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 213 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முகமது சிராஜ் 5 ரன்களுடன் களத்தில் நின்றார். இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லலேகே 5 விக்கெட்டுகளும், அசலன்கா 4 விக்கெடுகளும் அள்ளினர். இருவரும் சேர்ந்து இந்திய பேட்டிங் வரிசை சீர்குலைத்தனர்.