டெல்லி : இந்தியாவில் கடந்த 154 நாள்களில் குறைவான கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது. 25 ஆயிரத்து 166 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 3 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரத்து 679 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். கரோனா பெருந்தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 97.51 விழுக்காடு ஆக உள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும்.
இந்தத் தகவல்கள் செவ்வாய்க்கிழமை (ஆக.17) காலை 8 மணிக்கு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-
நாடு முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 437 ஆக உள்ளது. அந்த வகையில், இதுவரை மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 32 ஆயிரத்து 79 ஆக உள்ளது.
தற்போதுவரை நாட்டில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 846 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த 146 நாள்களுடன் ஒப்பிடும்போது இது குறைவாகும். மேலும் தொற்று பாதிப்பும் 1.15 விழுக்காடு ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 ஆயிரத்து 101 பேருக்கு பாதிப்புகள் குறைந்துள்ளன.
திங்கள்கிழமை (ஆக.16) மட்டும் 15 லட்சத்து 63 ஆயிரத்து 985 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை 49 கோடியே 66 லட்சத்து 29 ஆயிரத்து 524 பேருக்கு கரோனா சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த 22 நாள்களுடன் ஒப்பிடுகையில் இது 3 விழுக்காடு குறைவாகும். மேலும் வாரந்தோறும் கணக்கிடுகையில் பாதிப்பு 1.98 விழுக்காடு குறைந்துள்ளது. இது கடந்த 53 நாள்களில் இல்லாத நிலையாகும்.