நாட்டின் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 617 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிட்-19 நிலவரம்
நாட்டில் இதுவரை, மூன்று கோடியே நான்கு லட்சத்து 58 ஆயிரத்து 251 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஐந்து லட்சத்து ஒன்பதாயிரத்து 637 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 853 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை நான்கு லட்சத்து 312 பேர் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.
பரிசோதனை, தடுப்பூசி நிலவரம்
கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றுவரை (ஜூலை 1) நாடு முழுவதும் 41 கோடியே 42 லட்சத்து 51 ஆயிரத்து 520 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் நேற்று மட்டும் 18 லட்சத்து 80 ஆயிரத்து 26 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 42 லட்சத்து 64 ஆயிரத்து 123 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 34 கோடியே 76 ஆயிரத்து 232 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதிக பாதிப்புகள் கொண்ட மாநிலங்கள்
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கேரளாவில் 12 ஆயிரத்து 868 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதையும் படிங்க:டெல்டா வகை வைரஸிலிருந்தும் பாதுகாக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகள்!