டெல்லி: 'மோடி' சமூகத்தினர் மீது அவதூறு கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்கில், அவருக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் கடந்த 4ஆம் தேதி உத்தரவிட்டு இருந்தது.
இதனையடுத்து, ராகுலிடம் இருந்து பறிக்கப்பட்ட எம்.பி. பதவியை, மீண்டும் அவருக்கு வழங்கி, மக்களவை செயலகம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்மூலம் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி ஆகி உள்ளார். இதையடுத்து அவர் வயநாடு எம்.பி.யாக தொடர்வார் எனவும் அறிவித்து உள்ளது.
நாடாளுமன்றம் வருகை: இந்நிலையில், ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து உள்ளார். ராகுல் காந்தியை, அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது, கூட்டணி கட்சியினரும், நாடாளுமன்ற வளாகத்தில் வரவேற்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு, ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அவர் மக்களவை அலுவல் நடவடிக்கைகளில் பங்கேற்றார்.
தேஜஸ்வி யாதவ் வரவேற்பு :ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டு உள்ளதற்கு, காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது, INDIA கூட்டணியில் உள்ள் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். பிகார் மாநில துணை முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி முக்கிய நிர்வாகியுமான தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி கிடைத்து உள்ள நிகழ்வை, ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், உண்மை & இளமை, மரியாதை & அன்பு , நேர்மை மற்றும் எளிமை. பாசிச சக்திகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு போராடுகிறோம். #INDIA என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
தமிழக காங்கிரஸ் அசத்தல்:ராகுல் காந்தி மீண்டும் எம்பி பதவி பெற்று, நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து உள்ளதை கொண்டாடும் வகையில், தமிழக காங்கிரஸ், நடிகர் விஜய் நடிப்பிலான ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற “வாத்தி கம்மிங்” பாடலில், விஜயின் முகத்தில், ராகுல் காந்தியின் முகத்தை சேர்த்து வீடியோவாக தயாரித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தகவல்தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக துறையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, கொண்டாடி வருகின்றனர்.