ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் மூலம் இந்தியா தனது 50 விழுக்காடு நிலக்கரி தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியும் என தொழில்துறை உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜூலை 13ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நிலக்கரி இறக்குமதி தொடர்பான இந்தியா - ரஷ்யா இடையிலான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. தற்போது, முக்கிய எஃகு தயாரிக்கும் மூலப்பொருள்களின் தேவைக்காக, குறிப்பிட்ட சில வெளிநாடுகளின் இறக்குமதியை சார்ந்தே உள்ளூர் நிறுவனங்கள் உள்ளன.
இந்நிலையில், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் (ஜே.எஸ்.பி.எல்) நிர்வாக இயக்குநர் வி.ஆர்.ஷர்மா இது குறித்து கூறுகையில், "ரஷ்ய சுரங்கத் தொழிலாளர்கள் இந்திய எஃகு ஆலைகளுக்கு நிலக்கரி வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் தொலைநோக்குடன் முடிவெடுத்துள்ளது. ரஷ்யாவிலிருந்து குறைந்தது 50 விழுக்காடு நிலக்கரியையும், மற்ற நாடுகளிலிருந்து தேவைக்கேற்பவும் இந்தியா இறக்குமதி செய்து கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.