அமெரிக்கா: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த விவகாரத்தில், விபத்தை ஏற்படுத்திய போலீஸ் அதிகாரி கேலி செய்து பேசும் வீடியோ வெளியான நிலையில், அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்காவில் உள்ள இந்திய துணை தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவி விபத்தில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பல அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி போலீஸ் வாகனம் மோதிய விபத்தில் ஆந்திராவை சேர்ந்த மாணவி அமெரிக்காவில் உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், வாகனத்தை ஓட்டி வந்த கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனத்தை ஓட்டி கவனக்குறைவாக மாணவியின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.
அது மட்டும் இன்றி விபத்தை ஏற்படுத்திய உடன் அந்த போலீஸ் அதிகாரி, சியாட் காவல்துறை அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவர் டேனியல் ஆடரர் என்பவருக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு விபத்து குறித்தோ அல்லது மாணவி உயிரிழந்து விட்டாளே என்பது குறித்தோ கொஞ்சமும் கவலை கொள்ளாமல் கிண்டலாக பேசியுள்ளார். இது அவரின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ பதிவில் அவர், "அவ செத்துட்டா.. சாதாரணமான பொண்ணுதான்.. ஆமாம் ஒரு காசோலையை எழுதி வையுங்க.. பதினொன்றாயிரம் டாலர் போதும்.. அவளுக்கு அவ்வளவுதான் மதிப்பு"- என சிரித்துக்கொண்டே பேசியுள்ளார்.