டெல்லி : 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. முதல் தவணையாக நான்கு முறை இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்கள் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக காணொலி காட்சி வாயிலாக இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் இந்த காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி பங்கீட்டிற்கான முன்னேற்பாடுகள், கூட்டணி கட்சிகள் சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.