டெல்லி:இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள சரத் பவார் இல்லத்தில் நேற்று (செப் 13) நடைபெற்றது. இக்கூட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானதால் மற்ற 12 கட்சியினர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு கூறுகையில், "சட்டமன்ற தேர்தலுக்கான, தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்க முடிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாநில வாரியாக கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வேட்பாளர்களைத் தேர்வு செய்வார்கள். இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும், இந்தியா கூட்டணியின் முதல் பொதுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர்கள் பங்கேற்பார்கள். இந்த முதல் பொதுக்கூட்டம் அக்டோபர் மாதத்தின் முதல் வாரம் மத்திய பிரதேசம் போபாலில் நடைபெற உள்ளது. இந்தாண்டு இறுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.