டெல்லி :தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் வைத்து எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் வெளியான சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் தெலங்கானாவை தவிர்த்து மற்ற மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த அளவில் அமையவில்லை. ஏற்கனவே ஆட்சியில் இருந்த ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் கூட காங்கிரஸ் கட்சியால் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, இன்று (டிச. 6) எதிர்க் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்தார்.
அதேநேரம் பல்வேறு காரணங்களால் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானார்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதை அடுத்து, டிசம்பர் 6ஆம் தேதி கூட்டம் முறைப்படியான கூட்டம் இல்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.