பல்லேகலே : 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியன் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம் உள்ளிட்ட 6 நாடுகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. இதில் இன்று (செப். 2) இலங்கை பல்லேகலேவில் நடைபெறும் 3வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.
பாகிஸ்தான் அணி தொடர் தொடங்கியது முதலே சிறப்பான ஆட்டத்தை விளையாடி வருகிறது. நேபாளம் அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 238 ரன்கள் வித்தியாசத்தில் வென்று வரலாற்று சாதனை படைத்தது. தொடர்ந்து இன்று (செப். 2) இந்திய அணியை எதிர்கொள்கிறது.
பொதுவாகவே இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே ஆடுகளத்தில் அனல் பறக்கும், அதுவும் ஆசியக் கண்டத்தில் யாரது கை ஓங்கி இருக்கிறது என்பதை நிர்ணயிக்கும் வகையில் இந்த ஆட்டம் இருக்கும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது. வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக உழைப்பார்கள்.
இந்திய அணியில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் களமிறங்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. காயத்தில் இருந்து பூரண குணமடைந்த பிறகும் உடற்தகுதி காரணமாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் அவர் இருப்பதாக அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்து உள்ளார்.
கே.எல். ராகுல் செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெறும் நேபாளம் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் களமிறங்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக சுப்மான் கில் களமிறங்குவார் எனத் தெரிகிறது. இந்திய அணியில் விராட் கோலி, இஷான் கிஷன், ஸ்ரேயஸ் அய்யர் உள்ளிட்டோர் வலுசேர்க்கும் வகையில் உள்ளனர்.
பந்துவீச்சை பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா, நீண்ட நாட்களுக்கு பின் களமிறங்கும் குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை பேட்டிங் ஆர்டர் சிறப்பாக உள்ளது. கடந்த நேபாளம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக செயல்பட்டார்.