பாட்னா:2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இதற்காக காங்கிரஸ் தேசிய அளவில் மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்றிணைத்துள்ளது. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டார். அதன்படி, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளன.
இந்த எதிர்க்கட்சிகள் மக்களவைத் தேர்தலில் இணைந்து செயல்படுவது தொடர்பாகவும், தேர்தல் வியூகம் தொடர்பாகவும் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை மேற்கொண்டன. முதற்கட்டமாக பீகார் மாநிலம் பாட்னாவில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக பெங்களூரில் கடந்த ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 26 எதிர்க்கட்சிகள் அடங்கிய இக்கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் வைக்கப்பட்டது. அதன் பிறகு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன.
இதனிடையே தேர்தல் பணிகளுக்காக 'இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரை நியமிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதிஷ்குமார் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பேசப்பட்ட நிலையில், தனக்கு எந்த பதவியும் தேவையில்லை என்றும், அனைவரையும் இணைக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் நிதிஷ்குமார் கூறியுள்ளார். எதிர்க்கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராகவும் நிதிஷ்குமார் நியமிக்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில், அதற்கும் நிதிஷ்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.