புதுச்சேரி:கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இரண்டு பேர், வண்ண புகை குண்டை வீசியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடே காரணம் என்று கூறி எதிர்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பந்தமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்த 146 எம்பிக்கள் இடைக்கால தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இடைக்கால தகுதி நீக்கத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், புதுச்சேரி யூனியன் பிரதேசம் சுதேசி பஞ்சாலை அருகே இந்தியா கூட்டணி கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “மோடியின் ஆட்சியில் ஜனநாயக படுகொலை நடந்து வருகிறது. நரேந்திர மோடி அரசு 146 எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்து விட்டு, மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றி உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் நாடாளுமன்றமும், எம்பிக்களும் பாதுகாக்கப்பட்டனர்.