டெல்லி: காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட இந்தியா கூட்டணி, தனது 4வது கட்ட ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளது. டெல்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் நடைபெறுகிற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, எம்பி ராகுல் காந்தி, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் உள்ளிட்ட பல எதிர்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று உள்ளனர்.
திமுக சார்பில் எம்பி டி.ஆர்.பாலுவும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உள்ளார். தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவற்றில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே முரண்பாடு நிலவுவதாக தகவல் வெளியான நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது என்பது மத்திய அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்படுகிறது. அதிலும், நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவானது, இந்தியா கூட்டணிக்கு எதிர்பார்த்த ஒன்றாக அமையவில்லை.
குறிப்பாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது. அதேநேரம், தெலங்கானா மாநிலம் உருவானதில் இருந்து ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி, காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்தமாக நாட்டின் சில மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் நேரடியாக ஆட்சி செய்து வருகிறது.