தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காசா மோதல் தொடர்பான ஐநாவின் தீர்மானம்: வாக்கெடுப்பில் பங்கெடுக்காத இந்தியா - ஐநா மன்றம்

இஸ்ரேல், ஹமாஸ் இயக்கத்திற்கு எதிராக 11 நாள்கள் நடைபெற்ற மோதலில், காசா பகுதியில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க வலியுறுத்தும் ஐநாவின் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் பங்கேற்கவில்லை.

India abstains from voting on UNHRC resolution to probe alleged crimes during Gaza conflict
காசா மோதல் தொடர்பான ஐநாவின் தீர்மானம்: வாக்கெடுப்பில் பங்கெடுக்காத இந்தியா

By

Published : May 28, 2021, 7:43 PM IST

டெல்லி:47 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா மனித உரிமைகள் அமைப்பின் ஒரு நாள் சிறப்பு அமர்வு இன்று ஜெனீவாவில் நடைபெற்றது. கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்ற தீர்மானம் இந்த அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது தீர்மானத்திற்கு ஆதரவாக ரஷ்யா, சீனா உள்ளிட்ட 24 நாடுகளும் 9 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. மனித உரிமைகள் சபையின் இந்தியப் பிரதிநிதி மணி பாண்டே, சர்வதேச சமூகமும், பிராந்திய கட்சிகளும் போர்நிறுத்தம் தொடர்பாக எடுத்த முயற்சிகளை இந்திய அரசு வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலஸ்தீனப் பகுதிகளாக ஹராம், அல் செரீப் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற வன்முறைகள் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். 11 நாள்கள் மோதலில் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களுக்கு, குறிப்பாக காசா பகுதிக்கு சர்வதேச சமூகம் மனிதாபிமான உதவிகளைச் செய்யவேண்டும் எனவும் ஐநா மன்றத்தின் மூலம் பாலஸ்தீனிய ஆணையத்திற்கு இந்தியா கரோனா தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும், அந்த அறிக்கையில், அண்மையில், நடைபெற்ற மோதல்கள் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையான பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்குவதன் அவசியத்தை மீண்டும் அடிக்கோடிட்டு காட்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுளளார்.

இஸ்ரேல், ஹமாஸ் ஆகிய இருதரப்பும் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டன. போர்நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது. 11 நாள்கள் நடைபெற்ற கொடூர யுத்தத்தில் 230 பாலஸ்தீனியர்களும், 12 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.

இதையும் படிங்க:போர் நிறுத்தத்தை தொடருங்கள்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழுத்தம்!

ABOUT THE AUTHOR

...view details