புதுச்சேரி: இந்தியாவின் 77 வது சுதந்திர தினத்தையொட்டி இன்று (ஆகஸ்ட்15) புதுச்சேரி கடற்கரை சாலையில் முதல் அமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நாட்டின் 77வது சுதந்திர தினவிழா புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடியேற்றி வைத்து காவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து சுதந்திர தின விழாவில் பேசிய அவர், பெரியகாலாப்பட்டில் ரூ.20 கோடியிலும், நல்லவாடுவில் ரூ.19 கோடியிலும் மீன் இறங்கு தளம் அமைக்கவும், தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தை ரூ.54 கோடியில் விரிவாக்கம் செய்யவும் மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதால் விரைவில் அதன் பணிகள் தொடங்கப்படும் என்றார்.
மேலும், தட்டாஞ்சாவடியில் ரூ.528 கோடியில் சட்டசபை வளாகம், காலாப்பட்டில் ரூ.483 கோடியில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் கட்டப்பட உள்ளது. பாண்டி மெரினா கடற்கரையில் ரூ.14½ கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நீரை குழாய்கள் மூலம் கொண்டுசெல்ல ரூ.12½ கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பிள்ளையார்குப்பம் படுகை அணை ரூ.20 கோடியிலும், பாகூர் ஏரிக்கரையில் ரூ.8 கோடியில் ஒருவழிப் பாலம், கொம்பந்தான்மேடு அணைக்கட்டு ரூ.13 கோடியில் கரைகளை செம்மைப்படுத்துதல், குடுவையாற்றில் ரூ.2 கோடியில் படுகை அணை கட்டுவது உள்ளிட்ட நீர் நிலை மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும் என்றார்.