புவனேஸ்வர்:15-வது உலகக் கோப்பை ஹாக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புபனேஸ்வர் ஆகிய நகரங்களில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 13ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை தொடர் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று ஹாக்கி தொடரின் தொடக்க விழா வண்ண வண்ண விளக்குகளுக்கு மத்தியில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 2018ஆம் ஆண்டு 14-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் இந்தியாவில் நடத்தப்பட்டது. 4 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் சொந்த ஊரில் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுகிறது. இதன் மூலம் தொடர்ச்சியாக இருமுறை ஹாக்கி தொடரை நடத்திய முதல் நாடு என்ற சிறப்பு பெருமையை இந்தியா பெற்றது. தொடரில் 16 அணிகள் கலந்து கொண்டுள்ள நிலையில், அவை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா அணிகளும் 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆன பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான் அணிகளும் உள்ளன.
‘சி' பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி நாடுகளும், 'டி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு முன்னேறும்.