ராஞ்சி:மிட்செல் சான்டனர்தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-க்கு0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது.
தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு எதிரான டி20 தொடர் தொடங்கியது. முதலாவது இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பின் ஆலென் மற்றும் விக்கெட் கீப்பர் டிவென் கான்வாய், இந்திய பந்துவீச்சை திறம்பட சமாளித்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.
35 ரன்கள் எடுத்த நிலையில் தொடக்க வீரர் பின் ஆலென் அவுட்டாகி வெளியேறினார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபுறம் கான்வாய் அடித்து ஆடினர். கான்வாய் (52 ரன்), அரை சதம் அடித்த கையோடு அர்ஷ்திப் சிங் பந்துவீச்சில் தீபக் ஹூடாவிடம் விக்கெட்டை பறிகொடுத்து நடையை கட்டினார்.
அடுத்தடுத்து வந்த வீரர்கள் சீரிய இடைவெளியில் நடையை கட்டினாலும், நிலைத்து நின்று ஆடிய டேடி மிட்செல் இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடி நியூசிலாந்து ரன் கணக்கை உயர்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 176 ரன்களை குவித்தது. டேரி மிட்செல் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்றார்.
குறிப்பாக இறுதி ஓவர்களில் இந்திய வீரர்கள் ரன்களை வாரி வழங்கினர். இதனால் நியூசிலாந்து அணியின் ரன் ரேட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. தொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தொடக்க வீரர்கள் சுப்மான் கில் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் களமிறங்கினர்.