புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. மதிய உணவை பெங்களூரைச் சேர்ந்த சைவ தொண்டு நிறுவனம் வழங்கி வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு முட்டை மட்டும் அரசின் சமையல் கூடத்தில் இருந்து அளிக்கப்படுகிறது. கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதுடன் முட்டை வழங்கும் பணியும் நிறுத்தப்பட்டது.
மீண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவித்தார். அதன் அடிப்படையில் இன்று (ஜூலை 17) முதல் மாணவர்களுக்கு முட்டை வழங்கும் பணி தொடங்கியது. புதுச்சேரியில் உள்ள 293 அரசு பள்ளிகளுக்கு வாரம் மூன்று முட்டைகள் என சுழற்சி முறையில் ஒரு லட்சத்து 56 ஆயிரம் முட்டைகள் பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்றன.
இவை குருசுகுப்பம், ஏம்பலம், கலீத்தீர்தாள்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள சமையல் கூடத்தில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படுகிறது. மாணவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற முட்டை தரம் சோதித்த பிறகு சீல் வைக்கப்படுகிறது. மேலும், பள்ளிக்கு அனுப்பப்படுகின்ற முட்டைகளை வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதனை தடுப்பதற்காக முட்டையின் மேல் சீல் வைக்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. "புதுச்சேரி மதிய உணவுத்திட்டம்" (MDM-PDY) என்ற சீல் வைக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.