புதுச்சேரியில் ஆளும் மாநில அரசின் பரிந்துரை படி மூன்று நியமன எம்எல்ஏ நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது, மாநில அரசின் பரிந்துரை இன்றி மத்திய உள்துறை தன்னிச்சையாக பாஜகவைச் சேர்ந்தவர்களை நியமனம் எம்எல்ஏவாக நியமித்து வருகிறது. அதன்படி பாஜக மாநில தலைவர் சுவாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகிய மூன்று பேர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். அப்போது ஆளுநர் கிரண்பேடி மூன்று பேருக்கும் ராஜ்நிவாசில் வைத்து பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில் சில மாதங்களுக்கு பின் நியமன எம்எல்ஏக்கள் சட்டசபைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். அதனால் ஒரு நியமன எம்எல்ஏ பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் பாஜக மாநில துணைத் தலைவர் தங்க. விக்ரமன் நியமன எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளார். அவரை மத்திய உள்துறை நியமித்து உள்ளது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறையின் கூடுதல் செயலர் கோவிந்த மோகன் நேற்று (ஜன.29) பிறப்பித்துள்ளார். முழு நேர அரசியல்வாதியான தங்க.விக்கிரமன் ஏற்கனவே பாஜகவின் மூன்று முறை மாநில துணைத் தலைவர், பொதுச் செயலாளர் பதவிகளை வகித்தவர். 55 வயதாகும் விக்ரமனுக்கு சொந்த ஊர் பாகூர் பரிக்கல்பட்டு ஆகும்.