ஜம்மு காஷ்மீரில் கடந்த இரு நாள்களாக பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் தீவிர மோதல் நடைபெற்றுவருகிறது. தெற்கு காஷ்மீரில் உள்ள மாவட்டங்களில் இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன.
திங்கள் கிழமை அனந்த்நாக் மற்றும் பந்திபோரா ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடைபெற்ற மோதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பூன்ச் மாவட்டத்தில் உள்ள சுரான்கோட் காடுகளில் பாதுகாப்பு பயில் ஈடுபட்ட ஐந்து ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டு வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, துரான் இமாம்சாஹிப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், சோபியன் மாவட்டத்தில் வேறொரு பகுதியில் காவல்துறையினர் இரு பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.