அரிவாள்செல் சோகை (Sickle cell disease) என்ற ரத்தக்கோளாறு நோயால் செங்குருதி அணுக்களில் இயல்பான எண்ணிக்கையில் இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. அத்துடன், ரத்த சிவப்பு அணுக்கள் முழுமையாக வளர்ச்சி அடையாமல் அரை வட்டமாக, அரிவாள் போன்று வடிவத்தை அடைகிறது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவரின் உடலில் சீரான ரத்த ஓட்டமில்லாமல், போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் அனீமியா, கை - கால்களில் வீக்கம், பாக்டீரியா தொற்றுகள், பக்கவாதம் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் உருவாகும். மேலும், உடலில் பல்வேறு உறுப்புகள் தங்களின் செயல்திறனை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
அரிவாள்செல் சோகை குறித்துப் போதுமான ஆய்வுகள் முன்னெடுக்கப்படாத காரணத்தால் இந்தக் குறைபாட்டுக்கு நிரந்தரமான தீர்வோ மருந்தோ இல்லை. பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையைப் பொறுத்து, மருத்துவமனைகளில் சில முதலுதவிகள், அடிப்படையான சில சிகிச்சைகள் அளிக்கப்பட்டு இந்த நோய்க்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் சிற்றூர்களில் உள்ள சிறு சுகாதார மையங்களில் அரிவாள்செல் ரத்த சோகையைக் கண்டறிய ‘பாயிண்ட் ஆஃப் கேர் டெஸ்ட் ’ (பி.சி.டி.) நுட்பத்தைச் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக, இந்தியாவில் சுகாதாரத் துறையின் வழியே பாயிண்ட் ஆஃப் கேர் டெஸ்ட் பரிசோதனையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்த முதல் மாநிலம் என்ற பெருமையை சத்தீஸ்கர் பெற்றுள்ளது.