டெல்லி: நடப்பு நிதி ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனிடையே அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பெர்க், அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக ஆய்வு அறிக்கையை வெளியிட்டது.
இந்த ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிரொலித்தன. அதானி குழும விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தக் கோரி இரு அவைகளையும் முடக்கின. கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அம்ர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரண்டாவது கட்ட அமர்வு தொடங்கி இரண்டாவது வாரத்தை எட்டிய நிலையில், நாடாளுமன்றம் தொடர் முடக்கத்தையே கண்டு வருகிறது. இந்திய ஜனநாயகம் குறித்த சர்ச்சை கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று ஆளும் பாஜக கூட்டணி கட்சியினரும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தக் கோரி எதிர்க் கட்சிகளும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.