கேரளாவின் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (Cochin University of Science and Technology - CUSAT) படிக்கும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் பருவத்தில் விடுமுறை (CUSAT granted menstrual leave) அளிப்பது இதுவே கேரளாவில் முதன்முறையாகும்.
இதற்காக மாணவர் சங்கத்தின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியால் 2 சதவீதம் கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமான பருவத்தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் 75% வருகைப் பதிவு பெறுவது அவசியம். ஆனால், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் பெண்களுக்கு 73% சதவீத வருகைப் பதிவு இருந்தாலே போதுமானது என்று பல்கலைக்கழகம் ஒரு முக்கிய முடிவை அப்பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.
மாதவிடாய் விடுமுறை:பொதுவாக 75% வருகைப்பதிவு உள்ளவர்களே, இறுதி பருவத்தேர்வை எழுத தகுதியானவர்கள். இதனிடையே, உடல் நலக்குறைவால் விடுமுறை எடுப்பவர்கள் அதற்கு தகுந்த மருத்துவ சான்றிதழை வழங்கி அதற்கான அப்பருவத்தேர்வை எழுத தகுதி பெறும் வாய்ப்புள்ளது. இதில், மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை எடுக்க வாய்ப்பளித்து கூடுதலாக, 2% சதவீதம் தளர்வு அளித்துள்ளது. இதனால், மாணவிகளுக்கு பருவத்தேர்வு எழுத 73% இருந்தாலே போதுமானது.
இதன் தொடர்ச்சியாக, கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வரலாற்றில் முதன்முறையாக மாதவிடாய் விடுமுறை என்ற கருத்தை அறிமுகப்படுத்திய பெருமையை பெற்றுள்ளது. இதற்கான ஒவ்வொரு பருவத்தேர்வுக்கான 2% கூடுதல் விடுமுறை அளிப்பதற்கு அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இன்று கையெழுத்திட்டுள்ளார்.