டேராடூன்: உலகின் சிறந்த ராணுவ அலுவலர்களை உருவாக்குவது என்பது ஒன்றும் எளிய வேலை இல்லை. ஆனால், இந்தப் பணியை டேராடூனிலுள்ள இந்திய ராணுவ அகாடமி கடந்த 88 ஆண்டுகளாக சிறப்பாக மேற்கொண்டுவருகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 1400 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த ராணுவ அகாடமியில் இருந்து ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான சிறந்த ராணுவ வீரர்கள் நம்பிக்கை மற்றும் துணிச்சலுடன் ராணுவத்தில் இணைக்கின்றனர்.
இந்த ராணுவ அகாடமி வரலாற்று ரீதியாக மட்டும் சிறப்பு பெற்றதில்லை. இது ஆண்டுதோறும் உலகத்தரம் வாய்ந்த ராணுவ அலுவலர்களை உருவாக்கும் சிறந்த ஒரு பயிற்சி மையமாகும். இந்த அகாடமி ஒருவரை அனைத்து தரப்பில் மிகச் சிறந்த வீரனாக்குகிறது, மேலும் எந்த சவாலையும் ஏற்கும் திறன் கொண்ட போர் வீரர்களாகவும் மாற்றுகிறது.
கடந்த 1932ஆம் ஆண்டு இந்த அகாடமி தொடங்கப்பட்டபோது, வெறும் 40 பேர் மட்டுமே இதில் பயிற்சி பெற்றனர். 1971ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் முக்கிய வீரராக திகழ்ந்த சாம் மானேக்ஷா டேராடூனில் முதல் பேட்ஜில் பயிற்சி பெற்ற வீரர். பர்மிய ராணுவத் தளபதியாக இருந்த ஸ்மித் டன், பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த முஹம்மது மூசா கான் ஆகியோரும் டேராடூன் முதல் பேட்ஜில் பயிற்சி பெற்றவர்கள்.
இதுவரை இந்த அகாடமியில் இருந்து 2,500 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 62 ஆயிரம் ராணுவ வீரர்கள் பயிற்சி பெற்று, சிறந்த வீரர்களாக உருபெற்றுள்ளனர்.
மகாபாரத கதையில், துரோணாச்சாரியர் கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இங்குதான் பயிற்சி அளித்தார் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது, அதே இடத்தில் ராணுவ அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு போரில் உயிரிழந்த வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட ஒரு போர் நினைவுச்சின்னமும் கட்டப்பட்டுள்ளது. வளாகத்தில் ஒரு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு கடந்த 88 ஆண்டுகளில் நடைபெற்ற பல முக்கிய நினைவுகளை காட்சிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் சரணடைந்தது. அப்போது கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் நாட்டு கொடியும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.