இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்பி-யாக குடியரசுத் தலைவரால் நேரடியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
எட்ட இயலா சாதனைகளை படைத்த எளியவர்:இளையாராஜா நியமன எம்.பி பதவி குறித்த அறிவிப்புக்கு பின், பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்து வாழ்த்து தெரிவித்தார். அதில், ‘தலைமுறைகளைக் கடந்து இளையராஜாவின் அற்புத படைப்பாற்றல் மக்களை மகிழ்வித்து வருகிறது. அவரது இசைப் படைப்புகள் பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவன.
அவரது படைப்புகளைப் போலவே, எழுச்சி ஊட்டுவதாய் அவரது வாழ்க்கைப் பயணமும் அமைந்துள்ளது - எளிய பின்புலத்திலிருந்து உயர்ந்து எட்ட இயலா சாதனைகளை படைத்தவர். அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாய் உள்ளது' என பதிவிட்டிருந்தார்.
முதலமைச்சரின் மிட்-நைட் ட்வீட்: தமிழ்நாடு முதலைமச்சர் மு.க. ஸ்டாலின் இளையராஜவிற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ‘இசையால் நம் உள்ளங்களையும், மாநிலங்களையும் ஆண்ட 'இசைஞானி' இளையராஜா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்தவர்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘இசை மாமேதை, உத்வேகம் தரும் தனது வாழ்க்கை பயணத்தில் இசைஞானி இளையராஜா பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து, தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார்' என குறிப்பிடப்பட்டு இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், நியமன எம்பி பதவி வழங்கப்பட்ட தடகள வீராங்கனை பி.டி.உஷாவிற்கும் ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்தார்.
பண்ணைபுரம் டூ பாராளுமன்றம்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவையும், இளையராஜாவின் ட்விட்டர் பதிவையும் பகிர்ந்திருந்தார். மேலும் ‘பண்ணைபுரம் முதல் பாராளுமன்றம் வரை! ’ என பதிவு செய்து இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாரத ரத்னாவுக்கு தகுதியுடையவர்:தொடர்ந்து, சிதம்பரம் தொகுதி எம்.பியும், விசிக தலைவருமான தொல் திருமாவளவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். அந்த பதிவில், ‘மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜா அவர்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள். இந்திய கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும் பணியாற்றக்கூடிய ஆளுமை மிக்கவர். பாரத ரத்னா விருது பெறவும் முழுமையான தகைமை உடையவர் இசைஞானி இளையராஜா’ என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மாநிலங்களவை நியமன எம்பியாக இசைஞானி இளையராஜா நியமனம்!