இந்திய துறைமுகங்கள் மற்றும் உள்நாட்டு நீர்வழிகள் ஆகியவற்றுக்காக சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா தன்னாட்சி கணக்கெடுப்பு கருவியை ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இந்தக் கருவி ஹைட்ரோகிராஃபிக் மற்றும் கடல்சார் ஆய்வுகளை மேற்கொள்வது மட்டுமின்றி நீண்ட தூரத்திற்கு நிகழ்நேர தரவு பரிமாற்றத்தை வழங்க முடியும்.
இதில் எக்கோ சவுண்டர், ஜி.பி.எஸ் சிஸ்டம் மற்றும் பிராட்பேண்ட் தகவல்தொடர்பு தொழில்நுட்பம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, கடல்சார் பேலோடுகள்,360 டிகிரி கேமரா, லிடார் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கருவியின் முதல் சோதனை காமராஜர் துறைமுகத்தில் வெற்றிகரமாக முடிவடைந்தது. தற்போது, கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகர்ஜி (எஸ்.எம்.பி) துறைமுகத்தில் 2020 நவம்பரில் கடுமையான சூழலில் அடுத்தக்கட்ட பரிசோதனைகளை மேற்கொள்கின்றன. இந்தப் புதிய தொழில்நுட்பத்தை வணிகமயமாக்கும் பணிக்காக ஏற்கனவே கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துடன் ஐஐடி மெட்ராஸ் கலந்துரையாடி வருகிறது.
இதுகுறித்து பேசிய ஐ.ஐ.டி மெட்ராஸின் என்.டி.சி.பி.டபிள்யூ.சி பேராசிரியர் பேராசிரியர் கே. முரளி, "இந்த புதிய தொழில்நுட்பம் தற்போது வெளிநாட்டு தொழில்நுட்பத்தால் ஆதிக்கம் செலுத்தும் இந்திய கடல்சார் துறையில் நிச்சயமாக புதிய மாற்றத்தை கொண்டு வரும்.
ஆழமற்ற பகுதியிலும் கூட துல்லியமான அளவீடுகளை வழங்கும் திறன் கொண்டது. இதன் அளவு மற்றும் செயல்திறன் அதிகரித்து வரும் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய பெரிதும் உதவும்.