திருவனந்தபுரம் (கேரளா):கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் அரிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தொல்பொருட்களை தவறாகப் பயன்படுத்தியாக மோன்சன் மாவுங்கல் கைது செய்யப்பட்டார். இதன் மூலம் அவர் மீது 10 கோடி ரூபாய் ஏமாற்றி சம்பாதித்தாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இவர் சமீப காலங்களில் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஐஜி லக்ஷ்மன் கேரள குற்றப்பிரிவு காவல் துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் இந்த வழக்கு தொடர்பாக நான்காவதாக கைது செய்யப்பட்ட நபர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் கேரள குற்றப்பிரிவு காவல் துறை அறிக்கை தாக்கல் செய்து இருந்தது.
அதில், “தொல்பொருள் விற்பனை தொடர்பாக பொருளாதார மோசடி நடந்ததில் ஐஜி லக்ஷ்மன் மூளையாக செயல்பட்டவர். எனவே, அவர் மீது சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது இது குறித்து நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக எங்களுக்கு முக்கிய ஆதாரங்கள் கிடைத்து உள்ளன.
கைது பயத்தின் அடிப்படையில், ஐஜி லக்ஷ்மன் விசாரணைக்கு ஆஜராவதில்லை. எனவே, இவர் மீதான இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டு இருந்தது. முன்னதாக, இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கிய கேரள உயர் நீதிமன்றம், விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு உத்தரவிட்டு இருந்தது.