புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "தமிழ்நாடு, புதுச்சேரியை இணைக்க 287 கிலோ மீட்டர் தூரத்திற்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சாலைகளை மேம்படுத்த 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட புதுச்சேரி-கன்னியாகுமரி, புதுச்சேரி-சென்னை கடல்வழிப் போக்குவரத்துத் திட்டம் புதுச்சேரியில் செயல்படுத்தப்படும். கன்னியாகுமரி - புதுச்சேரி வழியாகச் சென்னைக்கு கடல்நீர் வழிப் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.
10 நாட்டிகல் மைல் தூரம் சென்று மீன்பிடித்துவரும் புதுச்சேரி மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், மீன்கள் அதிக அளவில் கிடைக்கும் வகையில் 100 நாட்டிகல் மைல் தூரம் வரை சென்று மீன்பிடிக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும்.
பாஜக ஆட்சி அமைந்தால் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி புதுச்சேரி பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் நான்கு முறை வளர்ச்சியை புதுச்சேரி அடையும். புதுச்சேரியை தமிழ்நாட்டோடு இணைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.
தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதால் தவறான பரப்புரையை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்துவருகிறார்" எனக் குற்றஞ்சாட்டினார்.