டெல்லி: இந்தியாவில் கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை வேகமாக வீசி வரும் சூழலில், மாநிலங்களுக்கு கரோனா சோதனை குறித்த புதிய அறிவுறுத்தலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.
கரோனா சோதனை குறித்த புதிய அறிவுறுத்தல் அதில் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் தற்போது ஆர்டிபிசிஆர், ட்ரூநேட், சிபிஎன்ஏடி உட்பட மொத்தம் 2,506 மூலக்கூறு சோதனை ஆய்வகங்கள் உள்ளன. அவை தற்போது மூன்று ஷிப்ட்களாக 24 மணி நேரமும் செயல்படுவதால், ஒரு நாளின் தேசிய சோதனை திறன் 15 லட்சங்களுக்கு அருகில் உள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற பல மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களுக்குள் வரும் பயணிகளுக்கு, 'ஆர்டிபிசிஆர் (rapid antigen test or RT-PCR) சோதனை நெகட்டிவாக இருக்க வேண்டும்' என வலியுறுத்தி வருகின்றன. ஆய்வகங்களின் சுமைகளை குறைக்க ஆரோக்கியமான தனிநபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை தேவையில்லை.
நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்க, அத்தியாவசியமற்ற பயணம் மற்றும் கரோனா அறிகுறி உள்ள நபர்களின் மாநிலங்களுக்கு இடையேயான பயணம் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.
துரித ஆன்டிஜென் சோதனை அல்லது ஆர்டிபிசிஆர் மூலம் ஒருமுறை தொற்று உறுதி செய்யப்பட்ட எந்தவொரு நபரிடமும் மீண்டும் அந்த சோதனை செய்யப்படக்கூடாது. அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்ள மாநில அரசுகள் ஆர்ஏடி பரிசோதனையை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.