ஹைதராபாத்: இலங்கை கிரிக்கெட்டில் (SLC) இலங்கை அரசாங்கத்தில் தலையீடு இருப்பதால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இலங்கை அணியை இடை நீக்கம் செய்துள்ளது. 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணி 9 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் இலங்கை அரசு இலங்கை கிரிக்கெட்டை (SLC) கலைப்பதாகத் தெரிவித்தது.
இதற்கு முன்னதாக இலங்கை அணி தொடர் தோல்வியால் இலங்கை கிரிக்கெட் (SLC) நிர்வாகிகள் மட்டும் கலைக்கப்பட்ட நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்ததை அடுத்து இலங்கை கிரிக்கெட் (SLC) முழுமையாகக் கலைக்கப்படுவதாகத் தெரிவித்தது. இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் (SLC) கலைக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இலங்கை கிரிக்கெட் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை பெறப்பட்டது.
இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று (நவ.10) முதல் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு இடைக்காலத் தடை விதித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.