ராஜஸ்தான்:ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 5 பேர் கடந்த 11ஆம் தேதி இரவு, விருந்துக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 2 மணியளவில், கழிவறையைப் பயன்படுத்துவதற்காகவும், சற்று இளைப்பாறுவதற்காகவும் அஜ்மீரில் நெடுஞ்சாலை அருகே இருந்த உணவகம் ஒன்றில் வாகனத்தை நிறுத்தினர்.
அப்போது உணவகத்தில் இருந்த ஊழியர்களை அழைத்து கழிவறையைத் திறக்கும்படியும், தங்களுக்கு உணவு வழங்கும்படியும் வற்புறுத்தியுள்ளனர். உணவகம் மூடப்பட்டுவிட்டதாக ஊழியர்கள் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த அதிகாரிகள் உணவக ஊழியர்களை தாக்கியுள்ளனர். ஊழியர்கள் பயந்து ஓடியபோதும் அவர்களை விரட்டிச் சென்று தாக்கியதாக தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக உணவக உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், காவல்துறை அதிகாரிகள் சிலர் தங்களது உணவகத்திற்குள் புகுந்து தகராறு செய்ததாகவும், ஊழியர்களை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல், அவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே காவல்துறை அதிகாரிகள் உணவக ஊழியர்களை தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோவை பகிர்ந்த பலரும், தகராறு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.