டெல்லி: இந்தியக் கடற்படையின் தற்காப்பு, தாக்குதல் வலிமைக்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பல் ஐஏசி (Indigenous Aircraft Carrier) விக்ராந்த். இந்தக் கப்பலைத் தயாரிக்க 2003ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கி 23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமான பணிகள், கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று முடிந்தது. முழுவதும் இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரான, இந்தக் கப்பலின் சோதனை ஓட்டம் ஆகஸ்ட் 4ஆம் தேதி கொச்சியில் தொடங்கியது.
கடந்த வாரம் நடந்த இந்தச் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக முடிந்தது. இந்த ஒரு வாரத்தில், கப்பலின் செயல்திறன், உந்துசக்தி, மின் உற்பத்தி, விநியோகம், துணை உபகரணங்கள் சோதனை உள்ளிட்டவை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டன.