புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர் சந்திப்பு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பிரச்னை தற்போது அரசியலில் பரபரப்பை உண்டாக்கி வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது, “புதுச்சேரி அரசின் நிர்வாகத்தில் ஏற்படும் காலதாமதம், கவர்னர் தலையீடு ஆகியவற்றை சுட்டிக்காட்டியே முதலமைச்சர் ரங்கசாமி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திப் பேசினார்.
இதை கவர்னர் தமிழிசை பூசி மொழுகப் பார்க்கிறார். கவர்னர், முதலமைச்சர் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இதனால்தான் அரசு அனுப்பிய வக்கீல் நியமன கோப்பில் கவர்னர் மாற்றி முடிவெடுத்தார். ஆனால், உண்மைக்கு புறம்பாக பொய்களை கவர்னர் பேசி வருகிறார். ஏற்கனவே, புதுவையின் சூப்பர் சிஎம் ஆக கவர்னர் செயல்படுகிறார் எனக் கூறி வருகிறேன்.
அதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் புலம்பல் உள்ளது. கவர்னரையோ, மத்திய அரசையோ எதிர்க்கும் தெம்பும், திராணியும் ரங்கசாமியிடம் இல்லை. மாநில அந்தஸ்து விவகாரம் தொடர்பாக நாங்கள் பேசியதற்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் பதிலளித்துள்ளார்.
அப்போது அவர், நான் மத்திய அமைச்சராக இருந்தபோது மாநில அந்துஸ்து பெறவில்லை எனக் கூறியுள்ளார். நான் மத்திய அமைச்சராக இருந்தபோது, லட்சுமிநாராயணன் புதுச்சேரியில் காங்கிரஸ் அமைச்சராக இருந்தார். அதன்பின் 2 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தார். தற்போது புடம்போட்ட தங்கம்போல பேசுகிறார்.
தேவகவுடா பிரதமராக இருந்தபோது உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா, மாநில அந்தஸ்து தர ஒப்புதல் அளித்தார். ஆனால், மாநிலத்தின் மாகி, ஏனாம் பிராந்தியங்களை கைவிட வேண்டும் என நிபந்தனை விதித்தனர். அதற்கு, நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
இதனால்தான் மாநில அந்தஸ்து தடைபட்டது. காங்கிரஸ் ஆட்சியில் 2 முறை ரங்கசாமி முதலமைச்சராக இருந்தார். அப்போதெல்லாம் அவர் மாநில அந்தஸ்து குறித்துப் பேசவில்லை. மத்திய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட கவர்னர்கள் மாநிலத்துக்கு எந்த தொந்தரவும் தரவில்லை.
மத்திய அரசின் நிதி குறைக்கப்பட்டதால் கூடுதல் நிதியைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் காங்கிரஸ் தரப்பில் சிறப்பு மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தினோம். இந்த கோரிக்கை 2016ஆம் ஆண்டில் தான் மாறியது. நான் முதலமைச்சராக இருந்தபோது, மாநில அந்தஸ்து கேட்டு சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினோம்.
டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்தோம். டெல்லி ஜந்தர்மந்திர் முன்பு போராட்டம் நடத்தினோம். நாடாளுமன்றத்தில் பல அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து மனு அளித்தோம். இந்த உண்மைகளை மறைத்து மாநில அந்தஸ்துக்காக நானும், காங்கிரசும் போராடவில்லை என அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவிக்கிறார்.
கட்சி மாறியதால் அவர் பொய் பேசுகிறார். நாங்கள் அதிகாரம் கேட்டதாக கூறுவது உண்மைக்குப் புறம்பானது. முதலமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்துக்காக பிரதமரை சந்திக்க எம்எல்ஏக்களை டெல்லி அழைத்துச் செல்வாரா? என்னையும், வைத்தியலிங்கம் எம்.பி., மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோரை லட்சுமிநாராயணன் மண் குதிரை எனக் கூறியுள்ளார்.
இந்த மண் குதிரைகள் தான் அவருக்கு காங்கிரஸில் சீட் வாங்கி கொடுத்தது. தொடர்ந்து அவர் இதேபோல பேசி வந்தால் அவரின் தோலை உரிப்போம் (தோலை உரிப்போம் என்பதற்கு அவரின் ரகசியங்களை வெளியிடுவேன் என்ற ரீதியில் கூறுவதாக பின்னர் கூறினார்). ரங்கசாமி மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினால், 3 மண் குதிரைகளும் காங்கிரஸ் தொண்டர்களோடு போராட்டத்தில் பங்கேற்போம்.
அமைச்சர்களின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம். அவரைப் பற்றிய தகவல்களை தேவைப்பட்டால் சொல்ல நேரிடும். மாநில அந்தஸ்து விவகாரத்தில் பாஜகவுக்கும், என்.ஆர்.காங்கிரஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. தேர்தல் சமயத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவோம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஆனால், இன்று மாறுபட்டுப் பேசி வருகின்றனர். முரண்பட்ட இரு கட்சிகளின் கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது. எந்த கட்சியில் கருத்து வேறுபாடு இல்லை. எங்கள் கருத்து வேறுபாடை கட்சிக்குள் பேசித் தீர்ப்போம். மற்ற கட்சிகள் இதில் தலையிட வேண்டாம்” என கூறினார்.
இதையும் படிங்க:'கிரண்பேடி ஆயுதம் விஷம்;தமிழிசை ஆயுதம் சர்க்கரை' - நாராயணசாமி விளாசல்!