பெங்களூரு: கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் காங்கிரஸ் 136 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக 65 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே, பல்வேறு கருத்துக் கணிப்புகளும், காங்கிரஸ் வெற்றிபெறும் என்றே கூறின.
இந்நிலையில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறுகையில், "சட்டமன்றத் தேர்தலில் பாஜக அடைந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். தோல்விக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை ஆராய்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தொண்டர்கள் முழு முயற்சி மேற்கொண்டும், எங்களால் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற முடியவில்லை. தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகு, அதுகுறித்து ஆராய்வோம். எந்த இடத்தில் பலவீனமாக இருக்கிறோமோ, அதை சரி செய்வோம்" எனக் கூறியுள்ளார்.