காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேராவின் அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சட்டவிரோத சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கிழக்கு டெல்லி சுக்தேவ் விஹாரில் உள்ள அலுவலகத்திற்குச் சென்ற வருமானவரித் துறையினர் அவரது வாக்குமூலத்தைப் பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.
லண்டனில் அமைந்துள்ள 12 மில்லியன் பவுண்ட்கள் மதிப்பிலான சொத்துகளின் உரிமையாளர் ராபர்ட் வதேரா எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வருமானவரித் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். 2018ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு குறித்த வதேராவிடம் அமலாக்கத் துறையினர் பலமுறை விசாரணை மேற்கொண்டனர்.
வதேராவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது 2015ஆம் ஆண்டு மற்றொரு வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி என்ற அந்த நிறுவனம், ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் ஏழை மக்களின் மறுவாழ்வுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வாங்கியது. 69.55 ஹெக்டேர் பரப்பிலான நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதனை அலெஜனரி ஃபின்லீஸ் என்ற நிறுவனத்திற்கு 5.15 கோடி ரூபாய்க்கு சட்ட விரோதமாக விற்றதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், 2018ஆம் ஆண்டு, குர்காவுனில் நில ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வதேரா, ஹரியானா முன்னாள்முதலமைச்சர் பூபேந்திர சிங் ஹூடா ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு, ஷிகோஹ்பூர் கிராமத்தில் 3.5 ஏக்கர் நிலத்தை ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் டிஎல்எஃப் நிறுவனத்திற்கு அதிக விலைக்கு விற்றதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், தன் மீது தொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என ராபர்ட் வதேரா மறுப்புத் தெரிவித்துவந்துள்ளார்.