திருவனந்தபுரம்: கேரள மாநில அரசு சார்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு லாட்டரி அறிவிக்கப்பட்டது. இந்த லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ. 25 கோடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த லாட்டரியின் குலுக்கல் செப்.18ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடந்தது. அதில் பழவங்காடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனூப் என்பவருக்கு ரூ. 25 கோடி பம்பர் பரிசு விழுந்தது.
இதனால், அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது "நான் மலேசியாவில் ஹோட்டல் வேலைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தேன். இனி அந்த வேலை எனக்கு தேவை இல்லை. இந்த பணத்தை வைத்து வீடு கட்டுவேன். எனது கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்துவேன். புதிதாக ஹோட்டல் ஒன்று தொடங்குவேன்" என்று தெரிவித்தார்.
வேதனைப்படும் ஆட்டோ ஓட்டுநர் இந்த நிலையில் இன்று (செப் 23) லாட்டரி மூலம் ரூ. 25 கோடி பரிசுத் தொகை வென்றதற்காக மிகுந்த வேதனைப்படுவதாக அனூப் தெரிவித்தார். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அனூப் வெளியிட்ட வீடியோவில், "பம்பர் லாட்டரியில் பணம் வென்றதற்காக 5 நாட்களுக்கு முன்பு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அதனை வார்த்தையால் சொல்ல முடியாது. ஆனால், இப்போது மன நிம்மதி இழந்துவிட்டேன். இரவு பகல் பாராது மக்கள் என்னை தொடர்பு கொண்டு நிதி உதவி கேட்கின்றனர். தினமும் வீட்டை முற்றுகையிட்டு தொல்லை கொடுக்கின்றனர்.
என்னால் வீட்டை விட்டு வெளியே முடியவில்லை. ஒரு நாளைக்கு ஒரு முறை தங்கியிருக்கும் இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறேன். இது எனக்கு இவ்வளவு சிரமத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை. நான் லாட்டரி வென்றிருக்க கூடாது. மக்கள் என்னுடையை நிலையை புரிந்துகொள்ள வேண்டும். சொல்லப்போனால் என்னிடம் இன்னும் பணம் வந்து சேரவில்லை" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பஞ்சாப் மாநிலத்துக்கு ரூ. 2,000 கோடி அபராதம்... ஏன் தெரியுமா..?