ஆந்திரா:கடந்த 2011ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கினார். அன்று முதல் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியின் தலைவராகவும், அவரது தாயார் விஜயம்மா கெளரவத் தலைவராகவும் இருந்து வந்தனர். கடந்த 2017ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், அவரது தாயார் விஜயம்மா கடந்த 8ஆம் தேதி தனது கெளரவத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், நேற்று(ஜூலை 9)ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் நிரந்தர தலைவராக, ஜெகன் மோகன் ரெட்டி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதற்காக கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, "மாநிலத்தில் வளர்ச்சி, நலத்திட்டங்கள், சமூக நீதி தொடர வேண்டும் எனில், நம்மை எதிர்ப்பவர்களிடமிருந்து கட்சியை பாதுகாப்பது தொண்டர்களாகிய உங்களின் கடமை. நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய நலத்திட்டங்களை நிறைவேற்றவில்லை என்றால், அடுத்த தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.
முந்தைய ஆட்சியில், 650 வக்குறுதிகள் அளிக்கப்பட்டால், அதில் 10 சதவீதம் கூட நிறைவேற்றப்படாது. அதன் காரணமாகவே அந்த ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில், தேர்தல் அறிக்கையில் கூறிய 95 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். அரசின் அனைத்து திட்டங்களையும் அதற்குரிய பயனாளர்களிடம் எடுத்துச் செல்வதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். அதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்.
கடந்த 2014-19ஆம் ஆண்டுக்கு இடையில் ஒய்எஸ்ஆர் காங்கிரசை பலவீனப்படுத்த எதிர்கட்சியினர் சதி செய்தனர். எங்களது எம்பி, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கினார்கள். ஆனால் நாங்கள் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறோம், மாறாக தெலுங்கு தேசம் கட்சியை பலவீனப்படுத்த முயற்சிக்கவில்லை. ஆனால் நாங்கள் கூறியதுபோல விவசாயிகளுக்கு 23 ஆயிரத்து 875 கோடி ரூபாயை செலவு செய்துள்ளோம். விவசாய சார்புடைய அரசு என்று கூறிக்கொள்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
நமது அரசு வந்த பிறகு புதிதாக 13 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அம்பேத்கரின் பெயரை ஒரு மாவட்டத்திற்கு வைத்ததற்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் வீடு எரிக்கப்பட்டது. இதுபோன்ற மிரட்டல்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். கடந்த 13 ஆண்டுகால அரசியல் பயணத்தில், எனக்கு ஆதரவாக நின்ற கட்சித் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் நன்றி" என்று கூறினார்.
இதையும் படிங்க: இந்தியா உள்பட 7 நாடுகளின் உக்ரைன் தூதர்கள் பதவிநீக்கம்: ஜெலன்ஸ்கி அறிவிப்பு!