சண்டிகர்: அதிரடி கலந்த ஆக்ரோஷமான கிரிக்கெட் விளையாட்டுக்கு சொந்தக்காரர் நவ்ஜோத் சிங் சித்து. தற்போது காங்கிரஸின் எம்எல்ஏ ஆக உள்ளார். முன்னதாக இவரிடமிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர் காங்கிரஸின் தலைமைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். இந்நிலையில் சண்டிகரில் அவரது வீட்டில் திங்கள்கிழமை (ஜூன் 21) செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "நான் தேர்தலில் மட்டும் பயன்படுத்தப்படக் கூடிய ஒரு பொருள் அல்ல.
துணை முதலமைச்சர் ஆசையில்லை
அதில் எனக்கு எந்த விருப்பமும் கிடையாது. கட்சி மாநில தலைமை மீது நிறைய அதிருப்தியாளர்கள் உள்ளனர். அவர்களை போலவே நானும் ஒருவன். மற்றப்படி நான் பாரம்பரிய காங்கிரஸ்காரன். மாறாக துணை முதலமைச்சர் பதவி வேண்டியும் நான் போராடவில்லை,
எந்தவொரு பதவி மீதும் எனக்கு பேராசை இல்லை. கட்சி மற்றும் மாநில மக்களின் பிரச்சினைகளுக்காகவே போராடுகிறேன். மாநிலத்தில் மதுபானக் கொள்கையை மாற்ற வேண்டும், அரசு ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் கமிஷன் அமைக்கப்பட வேண்டும்.
ஃபரிதாபூரில் மத உணர்வை இழிவுப்படுத்தியவர்களை தண்டிக்க வேண்டும். இதில் நீதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் காங்கிரஸ் அரசாங்கம் மீது அதிருப்தி நிலவுகிறது.
பிரசாந்த் கிஷோர் சந்திப்பு
இதெல்லாம் நான் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங்கை நேரில் சந்தித்தபோது வலியுறுத்தினேன். மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தி குறித்தும் கூறினேன். மாநில கருவூலத்திற்கு அதிக பணம் கிடைக்கும்படி திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.
நான் 17 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையை தொடர்கிறேன். எம்பி, எம்எல்ஏ, அமைச்சர் எனப் பொறுப்புகள் வகித்துள்ளேன். மூன்று முறை மக்களவை எம்பியாக இருந்துள்ளேன்” என்றார். தொடர்ந்து பேசுகையில், “2017ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணையும் பொருட்டு தன்னை 60க்கும் மேற்பட்ட முறை பிரசாந்த் கிஷோர் சந்தித்தார்” என்றும் கூறினார்.
நவ்ஜோத் சிங் சித்து, பாஜக சார்பில் மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் மனைவியும் பாஜக எம்எல்ஏ ஆவார். இந்நிலையில் 2017ஆம் ஆண்டு நவ்ஜோத் சிங் சித்து பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: 'பஞ்சாப் வெல்லும்' யூடியூப் சேனலை தொடங்கிய நவ்ஜோத் சிங் சித்து!