டெல்லி : காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை (அக்.16) தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய சோனியா காந்தி, “நீங்கள் அனுமதித்தால், காங்கிரஸ் கட்சியின் முழு நேரத் தலைவராக நான் பொறுப்பு வகிப்பேன். கட்சி மூத்தத் தலைவர்கள் ஊடகத்தில் பேசுவதை நிறுத்திவிட்டு தங்களின் கோரிக்கைகளை என்னிடம் நேரடியாக தெரிவிக்கலாம். அனைவருக்கும் சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் அவசியம்.
நாம் அனைவரும் சுதந்திரமான மற்றும் நேர்மையான கலந்துரையாடலை மேற்கொள்வோம். ஆனால் வெளியில் என்ன பேச வேண்டும் என்பதை பொறுப்புணர்வுடன் பேசுவோம்” என்றார்.
மேலும், “காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் மறுமலர்ச்சியை எதிர்பார்க்கின்றனர்; அதற்கு ஒற்றுமை அவசியம்” என்றும் சோனியா காந்தி கேட்டுக்கொண்டார்.
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக கபில் சிபல், குலாம் நபி ஆஸாத், ஆனந்த் சர்மா உள்பட 23 மூத்தத் தலைவர்கள் கடிதம் எழுதியிருந்தனர். அந்தக் கடிதத்தில் காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரத் தலைவர் வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் சோனியா காந்தியின் பேச்சு, கபில் சிபல் உள்ளிட்ட தலைவர்களின் கடிதத்திற்கு அளிக்கப்பட்ட பதிலாக பார்க்கப்படுகிறது.
இன்று (அக்.16) நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, காங்கிரஸ் முதலமைச்சர்கள் அசோக் கெலாட் (ராஜஸ்தான்), பூபேஷ் சிங் பாகல் (சத்தீஸ்கர்) மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : 'திமுகவுடன் ஒன்றிணைந்து பாடுபாடுவோம்' - ராகுல்