இந்தியாவில் செயல்பட்டுவரும் பிரபல கார் நிறுவனங்களில் ஒன்று ஹுண்டாய். தென்கொரியா நாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டுவருகிறது. கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 5) பாகிஸ்தானில் இருக்கும் ஹுண்டாய் நிறுவனம் ட்விட்டரில் காஷ்மீர் தொடர்பாக பதிவு ஒன்றை இட்டிருந்தது.
சர்ச்சைக்குரிய பதிவு
இந்தப் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் பலரும் இந்தப் பதிவை மேற்கோள்காட்டி தங்களுடைய கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர். அத்துடன் ஹுண்டாய் நிறுவனத்தை இந்தியர்கள் நிச்சயம் புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்துவந்தனர்.
கடந்த பிப்ரவரி 5 அன்று @Pakistanhyundai என்னும் ட்விட்டர் பக்கத்தில் காஷ்மீர் பிரிவினைவாதிகளை மேலும் கிளர்ச்சியாக்கும் வகையில், நமது காஷ்மீர் சகோதரர்களின் தியாகத்தை நினைவுகூருவோம், சுதந்திரத்திற்கான அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகத் துணை நிற்போம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ட்விட்டரில் இந்தக் கருத்திற்கு எதிராக இந்தியர்கள் கருத்து தெரிவித்து ஹுண்டாய் பொருள்களைப் புறக்கணிப்போம் என்று கூறி #BoycottHyundai என்னும் ஹேஸ்டாக்கை ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர்.
இது ஒருபுறமிருக்க கியா (KIA) நிறுவனமும்@KiaCrossroads என்னும் ட்விட்டர் பக்கத்தில் (உறுதிசெய்யப்படாத கணக்கு), ”காஷ்மீர் விடுதலைக்காக நாம் ஒற்றுமையுடன் இருப்போம்" தன் பங்கிற்கு கொளுத்திப்போட்டது. இந்தச் சர்ச்சையில் தானாகவே ஒட்டிக்கொண்ட கே.எஃப்.சி. நிறுவனமும் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் இதே பாணியில் பதிவு ஒன்றை இட்டுள்ளது.