ஐதராபாத் : மருத்துவர்களின் கவனக்குறைவு மற்றும் முறையற்ற சிகிச்சை காரணமாக திசுக்கள் இறப்பு ஏற்பட்டு பச்சிளம் குழந்தையின் மூக்கின் பாகம் தனியாக வந்ததாக கூறி பெற்றோர் அளித்த புகாரில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து ஐதராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் கலபட்டார் பகுதியைச் சேர்ந்தவர்கள் இம்ரான் - ஹர்சனுஷா கான் தம்பதி. திருமணமான 13 ஆண்டுகள் கழித்து இவர்களுக்கு குழந்தை பிறந்து உள்ளது. கடந்த ஜூன் 8ஆம் தேதி ஹைபர்கூடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹர்சனுஷாவுக்கு பிரசவம் பார்க்கப்பட்ட நிலையில் குறைமாதத்தில் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மூச்சுத் திணறல் உள்ள பிரச்சினைகள் காரணமாக பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து பச்சிளம் சிசுவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து உள்ளனர். ஏறத்தாழ 10 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு தங்களது குழந்தையை பார்த்த பெற்றோருக்கு அதிர்ச்சியாக சிசுவின் மூக்கு பகுதி கருப்பு நிறத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவர்களிடம் பெற்றோர் கேட்ட போது, தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு இருந்ததால் நிறமாற்றம் காரணமாக மூக்கு பகுதி கருப்பாக மாறியிருக்கலாம் என்றும் 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தைலத்தை எழுதிக் கொடுத்து கருப்பு நிறம் உள்ள இடத்தில் தடவுமாறு மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு பின் குழந்தையின் மூக்கில் கருப்பு நிறத்தில் இருந்த பகுதி தனியாக வந்ததாக சொல்லப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ந்து போன பெற்றோர், மருத்துவர்களிடம் முறையிட்ட நிலையில் அஜாக்கிரதையாக பதில் கூறியதாக சொல்லப்படுகிறது. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு வகை ஒளியுடன் கூடிய சிகிச்சையான போட்டோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.