ஹைதராபாத்: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த கேட்டரிங் சர்வீஸ் உரிமையாளர் ஒருவர், கும்பாபிஷேகத்தன்று பிரசாதமாக வழங்க 1,265 கிலோ எடையுள்ள லட்டு ஒன்றை தயார் செய்துள்ளார். இந்த லட்டு, குளிரூட்டப்பட்ட கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு இன்று அயோத்திக்கு அனுப்பப்பட உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா, வருகிற ஜன.22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள அரசியல் பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. மறுபுறம் 108 அடி நீள தூபக் குச்சி, 2,100 கிலோ எடையுள்ள மணி, 1,100 கிலோ எடையுள்ள ராட்சத விளக்கு, தங்க பாதணிகள் என பல சிறப்பு பரிசுகள் அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஹைதராபாத்தை சேர்ந்த நபர் ஒருவர், அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்புவதற்காக 1,265 கிலோ எடையுள்ள பிரமாண்டமான லட்டு ஒன்றை தயாரித்துள்ளார். இந்த லட்டு, கோயிலில் பிரசாதமாக வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹைதராபாத்தின் கண்டோன்மென்ட் பிக்கெட் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ ராம் கேட்டரிங் சர்வீசஸின் உரிமையாளர் நாகபூஷணம் ரெட்டி, வருகிற 22ஆம் தேதி நடக்க உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக 1,265 கிலோ எடையுள்ள பிரமாண்டமான லட்டு ஒன்றை தயார் செய்துள்ளார்.